Saturday 15 November, 2008

கண்ணாடி நிலா

நிலவே,
உன்னை விட பெரிய
கடனாளி இருக்க முடியாது..!
சூரியனிடம் நீ வாங்கிய
ஒளிக்கதிர்கள்.

பிறையே,
உன்னை விட பெரிய
யோகி இருக்க முடியாது,
வளர்ந்து தேய்த்து
வாழ்கை பாடத்தை
உணர்த்த..!

சந்திரனே,
நீயே! எங்கள் பூமியில்
குளத்தில் ‘ கண்ணாடி நிலா’ வாக
முகம் காட்டிக்கொண்டு இருக்க
மனிதன் மட்டும்
உன்னை தேடி ராக்கெட் ஏறி
வருகிறான்.
தேடுதல்
இல்லா வாழ்கை நீரில்
விழுந்த பிம்பங்கள்.

ஒரு நண்பன் இருந்தால்

முள்ளோடு நான் இருந்தாலும்
இதழ்களை மட்டும் ரசிக்க
வேண்டும் ஒருவன்.

இடிந்து போய் நொறுங்கும் நேரங்களில்
நான் சாய்ந்து கொள்ள தோழ்கள் வேண்டும்.

வாழ்க்கை பாதையில்
வழி பிரிகையில் நின்று
பாதையை காட்டவேண்டும் ஒரு
வழிப்போக்கன்.


கடிகார முள்ளோடு சேர்த்து
போட்டியிட வேகத்தின் உருவமாய்
வேண்டும் ஒருவன்.

மனச்சாட்சி போல கூட வேண்டாம்,
டைரி போல வேண்டும்.

ரயில் சிநேகம் போல இல்லாமல்
நிழல் போல ஒரு பயணி.

கங்காருவாய் என்னை
மடியில் வயித்து தங்கி கொள்ள..

தந்தையே..! தாயே..!
ஏன் காதலி கூட
நல்ல நண்பனாக
அமையலாம்.

உறவுகளை சொல்லி வேண்டாம்,
என் நண்பன் இப்படி கிடைத்தால்
போதும்..!

இப்படி எல்லாம்..!
எதிர் பார்த்து அல்ல
நான் நானாக இருக்க
நீ நீயாக இருக்க
நாமாக எப்போதும்
நண்பர்களாய் இருந்தால்
போதும்.

அழகான அவஸ்தைகள்

பெண்ணே ஒரு கவிதை அதனால்தான் பெண்களில் கவிஞர்களும் குறைவோ..? தெரியவில்லை, ஒரு பெண்ணின் காதல் தவிப்பை பதிவு செய்யும் முயற்சியில் எழுதிய கவிதை. நிறைய தவிப்புகள் பெண்களுக்கே உரித்தானவை, அவற்றை ரத்தமும் சதையும் கொண்டு வாழும் பெண்ணாலே மட்டும் உணர முடியும், நான் என்னால் முடிந்தவற்றை என் பேனா வரிகளில் வரைந்த கற்பனை கவிதையே..!
என்ன செய்வது என் பேனாவிற்கு ரத்தம் விடவில்லை மை தானே இட்டு எழுதுகிறேன். எத்தனை உண்மை என்று பெண்மை தான் சொல்ல முடியும்.
கள்வனே..!
என்ன மாயம் செய்து
என்ன தந்திரம் செய்தாயோ..!
என்னை உன் வசப்படுத்த.

என் வருகை உனக்கு
உணர்த்த காலில்
கொழுசு மாட்டி நடந்தேன்...

உன் அருகில் அமர இடம்
இருந்தும் உன் பின்னால்
இருந்த இருக்கைகளிலே அமர்ந்தேன்
உன்னை ரசிக்க வேண்டாமா..?

இரவில் படுக்கும் போதும் கூட
அருகில் நீ கனவிலாவது
வந்து படுக்க இடம் வேண்டும்
என்று தங்கையிடம் கூட படுப்பது இல்லை.

மௌனமாய் ஒரு காதல்
பார்த்து இருக்கிறாயா..?
அது என்னுடையது தான்.

பெண்ணாக பிறந்ததால்
எனக்குள் மடிந்து போன
ஆசைகள் தான் எத்தனை..?

என் தோழியிடம் சொல்லி இருக்கிறாய்
என் மேல் இருந்த காதலை,
என்னிடம் சொல்ல தயக்கம் ஏன்..?

புரியாத ஜடம் என்று நினைத்தாயோ..!
தயங்கி தயங்கி வந்து
மெதுவாக “ நான்.... நான் .... உன் .. உன்னை…_____.”
என்று சொல்லி விட்டு ஒன்னும் இல்லை என்று
மௌனமாய் நிற்பாய்,
கேள்வித்தாளில் வந்த கோடிட்ட
இடங்களை நிரப்புக போல..?
காதலை மட்டும் நான் சொல்வேன் என்று
நினைத்தாயோ..?


எனக்கு தெரியும்,
நீயும் என்னை விரும்புகிறாய் என்று,
நானும், உன்னை விரும்புகிறேன்...
பிறகு ஏன்
மௌனமாய் இந்த காதல்..?

இது தான் அழகான அவஸ்தைகள்,
நீ சொல்வாய் என்று நானும்,
நான் சொல்வேன் என்று நீயும்
நகரும் இந்த தருணங்கள்.

ஒரு போதும்,
நிலா தந்தி அடித்தது இல்லை
அதன் வருகையும் மறைவையும்
உணர்த்த..!


ஒரு நாளும்,
பறவைகளுக்கு கூடுகள் கட்ட,
பழங்கள் தின்ன,
வரவேற்புரை வாசிப்பது இல்லை..

பெண், நான் அமைதியாக
உன் வரவுக்காக
காத்து இருக்கிறேன்… மரம் போல்…!

தொலைந்து போன காதலி

நீ என்னை பார்த்தும்,
சற்று இமை திறந்து மூடினாய்
அன்று விழுந்தேன்
உன் கண்ணுக்குள்...!

சிக்கியது கண்ணுக்குள்ளே
என்றாலும் கண் திறந்தால்
விடுதலை என்று இருந்தேன்,
ஹ..மம், ஆயுள் கைதி ஆனேன்,
காதலில்..!

சீண்டினால் என்னை
தலையில் லேசாய்
கொட்டுவாய்.

மடியில் படுக்க வந்தால்
விலகி ஓடுவாய்
விலகி நின்றால்... வந்து
சாயிந்து கொள்வாய்
தோளில்…!

கன்னத்தில் கை வைத்து
அமர்கையில் தட்டி விட்டு
என்னை உற்சாக படுத்தும்
அழகு என்ன..?

என்னிடம் இருந்து
காலை வணக்கம்
இரவு வணக்கம் வராவிட்டால்..?
உன் மனது படும் திண்டாட்டம்
என்ன..?

இப்பொழுது ...
எங்கோ நீ
நாடு கடத்துப்பட்டு விட்டயா..?

பாஸ்போர்ட் இல்லாத
பறவை போல சிறகு விரித்து
பறந்தது எங்கே..!


நேற்று முடிவது
தெரியுமோ இல்லையோ..!
நாளை வருவதை
நோக்கி காத்து இருக்கிறேன்.

காணவில்லை பகுதியில் கூட
உன் முகம் தென்படவில்லை.
அப்போது எங்கோ பெற்றோருடன்
தான் இருக்கிறாய்.

கண்ணீர் அஞ்சலி பகுதியில் கூட
உன் முகம் தென்படவில்லை,
என் ஆன்மா எங்கோ
சுற்றி கொண்டு தான் இருக்கிறது,
உயிருடன்....

கவிதையே..! உனக்கு
தெரியுமோ இது
என்னுடைய புலம்பல் என்று..?

மொழியே..! உனக்கு
தெரியுமா இது
எந்தவித இலக்கியம் என்று..?

என் சுவாசகாற்றே ..!
நான் சுவாசிக்க காற்று மட்டும்
அனுப்பிக்கொண்டு இருக்கிறாய்...!
நானும் நம்புகிறேன் நீ
எங்கோ இருக்கிறாய் என்று..!

கடைசி கடிதம்


தற்கொலைக்கு முன்னால் ஒருவன் எழுதி வைத்த கடிதம் – ஒரு கற்பனையாய் எழுதிய கவிதை. இந்த வாழ்க்கை வெறுத்து போய் ஒரு சில நொடிகளில் மிகப்பெரிய தவறை அவன் செய்யும் முன் அவன் மனதில் ஓடும் சில என்ன ஓட்டங்கள் இங்கு தொகுத்து உள்ளேன்.



யாருக்கு முதலில் விடை கொடுக்க..?
தாய்க்கா ..? தந்தைக்கா..?
தோழனுக்கு..? காதலி...?

என் வாழ்க்கை பயணத்தில்
ஒரு முறை கூட இறங்கவில்லை
தோல்வி என்னும் பயணி.

இன்பமாய் இருக்கிறேன் என்று
நினைத்து முடிக்கும் முன்பு
'இ’ ‘தூ’ வாக மாறி இருந்தது.

நிறை குறைகள் ஓடு
ஏற்று கொண்ட
நண்பர்களுக்கு நன்றி.

காதலியாக வந்து நின்ற
உனக்கும் நன்றி.

பூமிக்கு கொண்டு வந்த
இரு தெய்வம்களுக்கும் நன்றி.

என் வாழ்க்கையில் எத்தனை முறை
முயற்சி என்ற சர்க்கரை
சேர்த்தும் இனிக்காத தின்பண்டம்.

விடியல் இன்று வரும்
நாளை வரும் என்று நினைத்து
ஏங்கிய நொடிகள் எத்தனை ..?

மேக மூட்டங்கள் என்று உடைக்க
நினைத்து உடைத்தெறிந்த
தடைகற்கள் தான் எத்தனை..?

போதும்... இனி உடைக்க
சக்தியும் இல்லை, உளியும் இல்லை.
‘ தெரியும்’ என்னை கோழை
என்பீர்கள், ஆம் இந்த கோழை
செய்யும் துணிச்சலான முடிவு.
பார்ப்போம் ..!
இதிலாவது எனக்கு வெற்றி
கிடைக்குமா இல்லை
யாரவது வந்து இந்த முறையும்
தோல்வி என்னும் பயணி
என்னை தொற்றி
கொள்கிறானோ என்னவோ ...?

சொல்லாத காதல்

உணர்ச்சியின்றி என்னுள்
ஒரு உணர்வு
பூத்தது – காதல்.

முதலில் பார்த்த போது
தென்றலாய் வந்து
மனதில் புயலாய்
மையம் கொண்டாய்.

என் அகராதியில் ஒரு
வார்த்தைக்கு இடம் இல்லாமல்
இருந்தது இன்று அதற்கும் இடம்.

எவ்வளவு நினைவு படித்து
பார்த்தும் நினைவுக்கு
வராதவை-உன்னை காதலிக்க
தொடங்கிய அந்த முதல் நொடி.

மனதில்,
பல தடவை வழக்காடு மன்றம் வைத்தும்
முடிவுக்கு வராதவை
சொல்லாமா வேண்டாமா?

என் காதலும் தையிரியமும்
வெறும் கண்ணாடி முன்பும்
கவிதையிலும் வந்து போனவை.

பேனாவும் தாள்களும் சட்டைபையும்
என் காதலை சுமந்த
நாட்கள் தான் எத்தனை..?

ஐந்து புலனில்
ஒரு புலன் கூடவா என்
காதலை உனக்கு
சொல்லவில்லை..?

உன்மேல் நான் காட்டிய
அன்பும் கூட என்
காதலை உனக்கு
உணர்த்த வில்லை.

பாவம்..!
தூது வருவான் என
நினைத்த அனுமனும்
கல்லாகி போனான்.

தொலைபேசியை எடுத்து
உன்னிடம் காதலை
சொல்லாமல் நானே
சாரி....Wrong நம்பர்..!
என்று கட் செய்த கால்கள்..
எத்தனை…?

என் டைரியை படித்தாவது
தெரிந்து கொள்ளட்டும்
என்று கொடுத்தால்
பிறர் டைரி படிப்பது
அநாகரிகம் என்று
திருப்பி கொடுத்ததை
என்னவென்று சொல்ல..?

கொடுமையடா..!
என் தாடியும் கூடவா
ஏன் என்று
உனக்கு புரியவில்லை.

என் கெட்ட நேரம்,
நீ பூ வாங்கும் போது
கூட வந்தால் பூக்காரி
சொல்வாள் என்று நினைத்தேன்...!
அவளும் 'பைவ் ஸ்டார் ' படம்
பார்த்து விட்டால் போலும்..?
காசை மட்டும் வாங்கி கொள்கிறாள்.

விதி..!
உன் முன்னால் கடித்தை கசக்கி போட்டால்
படிப்பாய் என்று பார்த்தால்
குப்பை கூடைக்கு
தள்ளி விட்டாய்.
பார்ப்போம்...!
சொல்லாத காதல்
என்று வெற்றிபெரும் என்று..?

கருவேலங்காட்டு காதல்

இன்று காபி ஷாப்பிற்கு உள்ளேயும், இன்டர்நெட், மல்டிப்ளெக்ஸ், பிஸா கார்னர், பீச், என்று திரியும் காதலர்கள்ளுக்கு மத்தியில் … இன்றும் எங்கோ நமது ஊரில் ஏதோ ஒரு கிராமத்தில், ஏதோ ஒரு கருவேலங்காட்டுக்குள் காதலித்து திரியும் சரவணன் – மீனாட்சியின் காதல்கள் இப்படி தான் முடிகின்றன…

கருவேலங்கட்டுகுள்ளே
முள் செடியின் புதர்களில்
மரங்களின் நிழலில்...

பச்சை வயல்கள் மட்டுமா
என்ன..?
கருப்பு முள் மரங்கள்
கூட அழகுதான்.

டாக்டர் போல, அங்கும் இங்கும்
சாயும் போது ஊசி
போட்டது முட்கள்.

எங்கோ..! ஜோடி குயில்களின்
கூச்சல், உரையாடல்
பாவம்- மனிதனுக்கு
புரியாத மொழி.

சாய்ந்த மரங்கள் போல
ஒருவர் மற்று ஒருவர் மேல்.

கிள்ளலில் தீண்டலில்
மரத்துக்கு மட்டுமா
பிடிக்கும் தீ..?
எங்களுக்கும் தான்.

ஒரு தலை வைத்து
ஒருவர் மீது ஒருவர்
சாய்ந்த போது
பேசிய கதைகள் தான் எத்தனை..?

எத்தனை ஏசி அறைகளிலும்
கிடைக்காத காற்று,
தனிமை.

உதடுகள் பேசிய வார்த்தைகள்
இலைகள் விட குறைவுதான்.
கண்கள் பேசிய வார்த்தைகள்
முட்கள் விட அதிகம் தான்.
உள்ளங்கள் பேசிய வார்த்தைகள்
மரங்கள் விட அதிகம் தான்.

உழி வைத்து எழுதிய மரம்
சொல்லும் நாம்
காதலர்கள் என்று..!

நான் கட்டிய தாலியும்
நீ வாங்கிய தாலியும்,
நம் உறவை வேறு என்று தான்
சொல்லும்.
நம் காதலை
இன்றும் தாங்கி நிற்பது என்னவோ
அந்த கருவேலங்காட்டு மரங்களே..!