Saturday 15 November, 2008

கண்ணாடி நிலா

நிலவே,
உன்னை விட பெரிய
கடனாளி இருக்க முடியாது..!
சூரியனிடம் நீ வாங்கிய
ஒளிக்கதிர்கள்.

பிறையே,
உன்னை விட பெரிய
யோகி இருக்க முடியாது,
வளர்ந்து தேய்த்து
வாழ்கை பாடத்தை
உணர்த்த..!

சந்திரனே,
நீயே! எங்கள் பூமியில்
குளத்தில் ‘ கண்ணாடி நிலா’ வாக
முகம் காட்டிக்கொண்டு இருக்க
மனிதன் மட்டும்
உன்னை தேடி ராக்கெட் ஏறி
வருகிறான்.
தேடுதல்
இல்லா வாழ்கை நீரில்
விழுந்த பிம்பங்கள்.

ஒரு நண்பன் இருந்தால்

முள்ளோடு நான் இருந்தாலும்
இதழ்களை மட்டும் ரசிக்க
வேண்டும் ஒருவன்.

இடிந்து போய் நொறுங்கும் நேரங்களில்
நான் சாய்ந்து கொள்ள தோழ்கள் வேண்டும்.

வாழ்க்கை பாதையில்
வழி பிரிகையில் நின்று
பாதையை காட்டவேண்டும் ஒரு
வழிப்போக்கன்.


கடிகார முள்ளோடு சேர்த்து
போட்டியிட வேகத்தின் உருவமாய்
வேண்டும் ஒருவன்.

மனச்சாட்சி போல கூட வேண்டாம்,
டைரி போல வேண்டும்.

ரயில் சிநேகம் போல இல்லாமல்
நிழல் போல ஒரு பயணி.

கங்காருவாய் என்னை
மடியில் வயித்து தங்கி கொள்ள..

தந்தையே..! தாயே..!
ஏன் காதலி கூட
நல்ல நண்பனாக
அமையலாம்.

உறவுகளை சொல்லி வேண்டாம்,
என் நண்பன் இப்படி கிடைத்தால்
போதும்..!

இப்படி எல்லாம்..!
எதிர் பார்த்து அல்ல
நான் நானாக இருக்க
நீ நீயாக இருக்க
நாமாக எப்போதும்
நண்பர்களாய் இருந்தால்
போதும்.

அழகான அவஸ்தைகள்

பெண்ணே ஒரு கவிதை அதனால்தான் பெண்களில் கவிஞர்களும் குறைவோ..? தெரியவில்லை, ஒரு பெண்ணின் காதல் தவிப்பை பதிவு செய்யும் முயற்சியில் எழுதிய கவிதை. நிறைய தவிப்புகள் பெண்களுக்கே உரித்தானவை, அவற்றை ரத்தமும் சதையும் கொண்டு வாழும் பெண்ணாலே மட்டும் உணர முடியும், நான் என்னால் முடிந்தவற்றை என் பேனா வரிகளில் வரைந்த கற்பனை கவிதையே..!
என்ன செய்வது என் பேனாவிற்கு ரத்தம் விடவில்லை மை தானே இட்டு எழுதுகிறேன். எத்தனை உண்மை என்று பெண்மை தான் சொல்ல முடியும்.
கள்வனே..!
என்ன மாயம் செய்து
என்ன தந்திரம் செய்தாயோ..!
என்னை உன் வசப்படுத்த.

என் வருகை உனக்கு
உணர்த்த காலில்
கொழுசு மாட்டி நடந்தேன்...

உன் அருகில் அமர இடம்
இருந்தும் உன் பின்னால்
இருந்த இருக்கைகளிலே அமர்ந்தேன்
உன்னை ரசிக்க வேண்டாமா..?

இரவில் படுக்கும் போதும் கூட
அருகில் நீ கனவிலாவது
வந்து படுக்க இடம் வேண்டும்
என்று தங்கையிடம் கூட படுப்பது இல்லை.

மௌனமாய் ஒரு காதல்
பார்த்து இருக்கிறாயா..?
அது என்னுடையது தான்.

பெண்ணாக பிறந்ததால்
எனக்குள் மடிந்து போன
ஆசைகள் தான் எத்தனை..?

என் தோழியிடம் சொல்லி இருக்கிறாய்
என் மேல் இருந்த காதலை,
என்னிடம் சொல்ல தயக்கம் ஏன்..?

புரியாத ஜடம் என்று நினைத்தாயோ..!
தயங்கி தயங்கி வந்து
மெதுவாக “ நான்.... நான் .... உன் .. உன்னை…_____.”
என்று சொல்லி விட்டு ஒன்னும் இல்லை என்று
மௌனமாய் நிற்பாய்,
கேள்வித்தாளில் வந்த கோடிட்ட
இடங்களை நிரப்புக போல..?
காதலை மட்டும் நான் சொல்வேன் என்று
நினைத்தாயோ..?


எனக்கு தெரியும்,
நீயும் என்னை விரும்புகிறாய் என்று,
நானும், உன்னை விரும்புகிறேன்...
பிறகு ஏன்
மௌனமாய் இந்த காதல்..?

இது தான் அழகான அவஸ்தைகள்,
நீ சொல்வாய் என்று நானும்,
நான் சொல்வேன் என்று நீயும்
நகரும் இந்த தருணங்கள்.

ஒரு போதும்,
நிலா தந்தி அடித்தது இல்லை
அதன் வருகையும் மறைவையும்
உணர்த்த..!


ஒரு நாளும்,
பறவைகளுக்கு கூடுகள் கட்ட,
பழங்கள் தின்ன,
வரவேற்புரை வாசிப்பது இல்லை..

பெண், நான் அமைதியாக
உன் வரவுக்காக
காத்து இருக்கிறேன்… மரம் போல்…!

தொலைந்து போன காதலி

நீ என்னை பார்த்தும்,
சற்று இமை திறந்து மூடினாய்
அன்று விழுந்தேன்
உன் கண்ணுக்குள்...!

சிக்கியது கண்ணுக்குள்ளே
என்றாலும் கண் திறந்தால்
விடுதலை என்று இருந்தேன்,
ஹ..மம், ஆயுள் கைதி ஆனேன்,
காதலில்..!

சீண்டினால் என்னை
தலையில் லேசாய்
கொட்டுவாய்.

மடியில் படுக்க வந்தால்
விலகி ஓடுவாய்
விலகி நின்றால்... வந்து
சாயிந்து கொள்வாய்
தோளில்…!

கன்னத்தில் கை வைத்து
அமர்கையில் தட்டி விட்டு
என்னை உற்சாக படுத்தும்
அழகு என்ன..?

என்னிடம் இருந்து
காலை வணக்கம்
இரவு வணக்கம் வராவிட்டால்..?
உன் மனது படும் திண்டாட்டம்
என்ன..?

இப்பொழுது ...
எங்கோ நீ
நாடு கடத்துப்பட்டு விட்டயா..?

பாஸ்போர்ட் இல்லாத
பறவை போல சிறகு விரித்து
பறந்தது எங்கே..!


நேற்று முடிவது
தெரியுமோ இல்லையோ..!
நாளை வருவதை
நோக்கி காத்து இருக்கிறேன்.

காணவில்லை பகுதியில் கூட
உன் முகம் தென்படவில்லை.
அப்போது எங்கோ பெற்றோருடன்
தான் இருக்கிறாய்.

கண்ணீர் அஞ்சலி பகுதியில் கூட
உன் முகம் தென்படவில்லை,
என் ஆன்மா எங்கோ
சுற்றி கொண்டு தான் இருக்கிறது,
உயிருடன்....

கவிதையே..! உனக்கு
தெரியுமோ இது
என்னுடைய புலம்பல் என்று..?

மொழியே..! உனக்கு
தெரியுமா இது
எந்தவித இலக்கியம் என்று..?

என் சுவாசகாற்றே ..!
நான் சுவாசிக்க காற்று மட்டும்
அனுப்பிக்கொண்டு இருக்கிறாய்...!
நானும் நம்புகிறேன் நீ
எங்கோ இருக்கிறாய் என்று..!

கடைசி கடிதம்


தற்கொலைக்கு முன்னால் ஒருவன் எழுதி வைத்த கடிதம் – ஒரு கற்பனையாய் எழுதிய கவிதை. இந்த வாழ்க்கை வெறுத்து போய் ஒரு சில நொடிகளில் மிகப்பெரிய தவறை அவன் செய்யும் முன் அவன் மனதில் ஓடும் சில என்ன ஓட்டங்கள் இங்கு தொகுத்து உள்ளேன்.



யாருக்கு முதலில் விடை கொடுக்க..?
தாய்க்கா ..? தந்தைக்கா..?
தோழனுக்கு..? காதலி...?

என் வாழ்க்கை பயணத்தில்
ஒரு முறை கூட இறங்கவில்லை
தோல்வி என்னும் பயணி.

இன்பமாய் இருக்கிறேன் என்று
நினைத்து முடிக்கும் முன்பு
'இ’ ‘தூ’ வாக மாறி இருந்தது.

நிறை குறைகள் ஓடு
ஏற்று கொண்ட
நண்பர்களுக்கு நன்றி.

காதலியாக வந்து நின்ற
உனக்கும் நன்றி.

பூமிக்கு கொண்டு வந்த
இரு தெய்வம்களுக்கும் நன்றி.

என் வாழ்க்கையில் எத்தனை முறை
முயற்சி என்ற சர்க்கரை
சேர்த்தும் இனிக்காத தின்பண்டம்.

விடியல் இன்று வரும்
நாளை வரும் என்று நினைத்து
ஏங்கிய நொடிகள் எத்தனை ..?

மேக மூட்டங்கள் என்று உடைக்க
நினைத்து உடைத்தெறிந்த
தடைகற்கள் தான் எத்தனை..?

போதும்... இனி உடைக்க
சக்தியும் இல்லை, உளியும் இல்லை.
‘ தெரியும்’ என்னை கோழை
என்பீர்கள், ஆம் இந்த கோழை
செய்யும் துணிச்சலான முடிவு.
பார்ப்போம் ..!
இதிலாவது எனக்கு வெற்றி
கிடைக்குமா இல்லை
யாரவது வந்து இந்த முறையும்
தோல்வி என்னும் பயணி
என்னை தொற்றி
கொள்கிறானோ என்னவோ ...?

சொல்லாத காதல்

உணர்ச்சியின்றி என்னுள்
ஒரு உணர்வு
பூத்தது – காதல்.

முதலில் பார்த்த போது
தென்றலாய் வந்து
மனதில் புயலாய்
மையம் கொண்டாய்.

என் அகராதியில் ஒரு
வார்த்தைக்கு இடம் இல்லாமல்
இருந்தது இன்று அதற்கும் இடம்.

எவ்வளவு நினைவு படித்து
பார்த்தும் நினைவுக்கு
வராதவை-உன்னை காதலிக்க
தொடங்கிய அந்த முதல் நொடி.

மனதில்,
பல தடவை வழக்காடு மன்றம் வைத்தும்
முடிவுக்கு வராதவை
சொல்லாமா வேண்டாமா?

என் காதலும் தையிரியமும்
வெறும் கண்ணாடி முன்பும்
கவிதையிலும் வந்து போனவை.

பேனாவும் தாள்களும் சட்டைபையும்
என் காதலை சுமந்த
நாட்கள் தான் எத்தனை..?

ஐந்து புலனில்
ஒரு புலன் கூடவா என்
காதலை உனக்கு
சொல்லவில்லை..?

உன்மேல் நான் காட்டிய
அன்பும் கூட என்
காதலை உனக்கு
உணர்த்த வில்லை.

பாவம்..!
தூது வருவான் என
நினைத்த அனுமனும்
கல்லாகி போனான்.

தொலைபேசியை எடுத்து
உன்னிடம் காதலை
சொல்லாமல் நானே
சாரி....Wrong நம்பர்..!
என்று கட் செய்த கால்கள்..
எத்தனை…?

என் டைரியை படித்தாவது
தெரிந்து கொள்ளட்டும்
என்று கொடுத்தால்
பிறர் டைரி படிப்பது
அநாகரிகம் என்று
திருப்பி கொடுத்ததை
என்னவென்று சொல்ல..?

கொடுமையடா..!
என் தாடியும் கூடவா
ஏன் என்று
உனக்கு புரியவில்லை.

என் கெட்ட நேரம்,
நீ பூ வாங்கும் போது
கூட வந்தால் பூக்காரி
சொல்வாள் என்று நினைத்தேன்...!
அவளும் 'பைவ் ஸ்டார் ' படம்
பார்த்து விட்டால் போலும்..?
காசை மட்டும் வாங்கி கொள்கிறாள்.

விதி..!
உன் முன்னால் கடித்தை கசக்கி போட்டால்
படிப்பாய் என்று பார்த்தால்
குப்பை கூடைக்கு
தள்ளி விட்டாய்.
பார்ப்போம்...!
சொல்லாத காதல்
என்று வெற்றிபெரும் என்று..?

கருவேலங்காட்டு காதல்

இன்று காபி ஷாப்பிற்கு உள்ளேயும், இன்டர்நெட், மல்டிப்ளெக்ஸ், பிஸா கார்னர், பீச், என்று திரியும் காதலர்கள்ளுக்கு மத்தியில் … இன்றும் எங்கோ நமது ஊரில் ஏதோ ஒரு கிராமத்தில், ஏதோ ஒரு கருவேலங்காட்டுக்குள் காதலித்து திரியும் சரவணன் – மீனாட்சியின் காதல்கள் இப்படி தான் முடிகின்றன…

கருவேலங்கட்டுகுள்ளே
முள் செடியின் புதர்களில்
மரங்களின் நிழலில்...

பச்சை வயல்கள் மட்டுமா
என்ன..?
கருப்பு முள் மரங்கள்
கூட அழகுதான்.

டாக்டர் போல, அங்கும் இங்கும்
சாயும் போது ஊசி
போட்டது முட்கள்.

எங்கோ..! ஜோடி குயில்களின்
கூச்சல், உரையாடல்
பாவம்- மனிதனுக்கு
புரியாத மொழி.

சாய்ந்த மரங்கள் போல
ஒருவர் மற்று ஒருவர் மேல்.

கிள்ளலில் தீண்டலில்
மரத்துக்கு மட்டுமா
பிடிக்கும் தீ..?
எங்களுக்கும் தான்.

ஒரு தலை வைத்து
ஒருவர் மீது ஒருவர்
சாய்ந்த போது
பேசிய கதைகள் தான் எத்தனை..?

எத்தனை ஏசி அறைகளிலும்
கிடைக்காத காற்று,
தனிமை.

உதடுகள் பேசிய வார்த்தைகள்
இலைகள் விட குறைவுதான்.
கண்கள் பேசிய வார்த்தைகள்
முட்கள் விட அதிகம் தான்.
உள்ளங்கள் பேசிய வார்த்தைகள்
மரங்கள் விட அதிகம் தான்.

உழி வைத்து எழுதிய மரம்
சொல்லும் நாம்
காதலர்கள் என்று..!

நான் கட்டிய தாலியும்
நீ வாங்கிய தாலியும்,
நம் உறவை வேறு என்று தான்
சொல்லும்.
நம் காதலை
இன்றும் தாங்கி நிற்பது என்னவோ
அந்த கருவேலங்காட்டு மரங்களே..!

Tuesday 7 October, 2008

கண்ணீர் பூமி...! (எ) கிராமத்துக் குடும்பங்கள்.

அரிசி, பருப்பு எடுத்து வைக்கும்
மண் பானையில்
புழுக்கள் இல்லாமல் இருந்தால்
அதிசயம்- முதல் படையல்
எப்போதும் அவர்களுக்குத்தான்.

மழைக்கு போட்ட கூரையில்
கூட கரையான் பரம்பரை
வந்து வாழ்ந்து கொண்டது...!
அகதிகளாக பல்லியும்
எறும்பும் வண்டுகளும்
சேர்த்து கொண்டது.

ஆடையில் கிழிசல்களை
மறைக்க பலமுறை
அதற்க்கு டெய்லர்
வேலை செய்து இப்போது
ஓட்டைகளை விட
நூர்த்த தையல்களே அதிகம்.

அந்த வீட்டுக் குழந்தைக்கு
கற்பிக்கும் முதல்
பாடம்-பரீட்சை
எல்லாம் பசியை அடக்கும் வழிகள்.

தினசரி நேரம் பார்த்தோ,
காலண்டர்களில் தேதி கிழித்தோ,
நாளேடு படித்தோ பொழுதும்
விடிந்தது கிடையாது..?

அவர்கள் வாழ்கை பயணத்தில்
ஞாயிறும் இல்லை சனியும் இல்லை.
இரண்டே- பிறப்பும் இறப்பும்.

நாள் கணக்கும்,
அவர்கள் உண்ணும் கணக்கும்,
எப்போதும் ஏறியது இல்லை,
இறக்கம் மட்டும் பல தினங்களில்…

அவர்கள் கொண்டாடும்,
ஒரே திருவிழா – திருமணம்
அதுவும் மஞ்சள் கயிறும்
மாலையுடன் முடித்து போனது.

இவன் மட்டும் சொல்ல முடியும்
அவன் உண்ட அரிசி
பருக்கைகளின் கணக்கு..?

தடுப்பு ஊசி கிடையாது,
அவனுக்கு வரும் பசி என்ற
நோயை குணப்படுத்த..?

ஆடி மாதம் ஆனால்
வாரம் ஒரு முறை
ஏன் தினமும் கூட
கிரகப்பிரவேசம்– காற்றுக்கு எந்த
கூரை நின்றது..?
ஐப்பசி மாதம் வந்தால் தினமும்
குளியல் தான்- எல்லாம்
மழையால்..!

அவர்கள் அறிந்த ஒரே
வங்கி - மண்பானை.
பயன்படுத்தும் ஒரே
வாகனம் -நடைராஜா சர்வீஸ்.

சூரிய ஒளியும் நிலவொளியும் தவிர
வாழ்வில் ஒளி என்றால்
மண் தீபம் தரும் ஒளிதான்.

எல்லா கூரை வீட்டிலும்
ஜன்னல் கதவு உண்டோ
கண்டிப்பாக ஓட்டைகள்.


இப்படி பல குடுபங்களில்
மெகா தொடர்களில்
வருவதைப்போல தொடரும் மட்டுமே,
முற்றும் தெரியவில்லை..?

காதல் கதைகள்

நண்பர்கள் ரகசியமாய் என்னிடம் வந்து சொன்ன காதல் கதைகள், வெளியிட்டு விட்டேன் என்று நினைக்காதிர்கள் அவை எனக்கும் உங்களுக்கும் மட்டுமே புரிந்தவை.


அவரை பாராட்டிய போது
இருந்த ஈர்ப்பின் சக்தியில்
உணர்ந்தேன் அவளின் காதலை...!

அழகாய் இருந்த புகைப்படத்தில்
உன் பெயரின் பின்னால் அவள் பெயர்
கிறுக்கி வைத்து இருந்ததை
பார்த்த போது உணர்ந்தேன்
ஒரு காதல் கிறுக்கனை..!

ரயில் பயணத்தில் நீ
சொன்ன போது புரிந்தது
எப்போதோ நீ வரைந்த
ஓவியத்தின் அர்த்தம்.

நண்பர்கள் சிரித்த வகுப்பு
போட்டோவில் அவளை மட்டும் மேற்கோள் போட்ட
உன்னை அறித்தேன் காதலனாய்.

தோழமையில் மாட்டிகொண்ட பின்பு,
நீ எழுதிய காதல் கடிதத்தை
அவளிடம் தர மனமில்லாமல்
தோழமைக்காக கிழித்த போது
உணர்ந்தேன் ஒரு காதலை..!


உனக்கு நண்பனாக இருந்தவனே அவளுக்கு
காதலனாய் ஆனபின்
நீ வளர்த்த தாடியில்
பார்த்தேன் காதலை.

காதலை அவளிடம் சொன்ன பின்
அவள் இல்லை என்று மறுத்த போது,
கண்ணீரால் பூத்த உன் கண்களில்
அறிந்தேன் காதலின் வலியை...!

இருவருமே..!
காதலை உணராமல்,
நாங்கள் நண்பர்களே என்று..
சொல்லிக்கொண்டு இருந்தவர்கள்,
எங்கு காதலில் விழுந்து விடுவோமோ..!
என்று நினைத்து
நண்பர்களாகவே இருப்போமே..! என்று
முடிவு எடுத்து பிரிந்த போது
உணர்ந்தேன் நட்பின் பெருமையை.

ரசித்த நொடிகள்....



மொட்டாய் இருந்த மனதில் விடியும் முன் சட்டு என்று பூத்த சில நொடிகள் இங்கே தொகுத்து உள்ளேன்.


அட..!
காதல் வந்த நொடி
என்னை நான் ரசித்த
முதல் நொடி.

நிலா மேகத்தில் மறைந்தது
போல நான் விடுமுறையில் மறைந்து
நண்பனை கண்ட
இரண்டாவது நொடி.

தோழனாய், என்னிடம் முறையிட்ட
நண்பர்கள்,
அவளிடம் அல்லாமல், அவர்கள்
காதலை, அதன் வலியை
என்னிடம் மட்டுமே
சொன்ன அந்த உள்ளங்களை...!

கண்களால் மட்டுமே
அதிர்ந்து போக
வைத்த இயற்கை அழகு..!

மனதால் மட்டுமே
உணர முடிந்த
உதவி என்னும் செயலை
வாங்கியபோதும்,
வழங்கியபோதும்...!.

ஓடம் போல சீராய் சென்ற
வாழ்கையில்...
உற்சாக மருந்தாக
கிடைத்த பாராட்டுகள்.

நன்றியை மட்டும்
மறவாமல் என்றும்
நட்பு பாராட்டும்
நண்பர்கள்.

இவை எல்லாம்
நான் ரசித்தேன்..!
உன்னை பார்த்த பின்புதான்
இவை காதலின் சக்தியா....?

Friday 26 September, 2008

ஸ்ரீரங்கத்து தேவதை...!

விபத்துகள் நடப்பது செயற்கையா இயற்கையா என்ற விவாத்துக்குள் செல்லாமலும், நாத்திகமா ஆத்திகமா என்ற விவாத்துக்குள் செல்லாமலும் ஒரு கவிதை. ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்த ஒரு கோரமான தீ விபத்தை நாளேடுகளில் படித்த போது தோன்றிய சில எண்ணங்களை கவிதையாய் உங்கள் முன்…

தீ விபத்தில் இறந்த ஆன்மாக்களுக்கும் எமன் விட்டு சென்ற ஜீவன்கள்ளுக்கும் என் இந்த கவிதை சமர்ப்பணம்.

வாழ்க்கை பாடம் கற்றுக்கொள்ள
இரண்டாம் வழி திருமணம்.
அதை நோக்கி பயணம்
செய்த தேவதையின் கதை.

கனவு காண்பதை
நிறுத்தவோ தடுக்கவோ முடியாத
ஒரு வயது.

தூக்கத்தில் மட்டும் கனவா
ஓவ்வொரு அசைவிலும்
கனவுகளின் பிரதிபலிப்புகள்.

கடைக்குட்டியின் சேவையில்
வாழ்த்த குடும்பம்
குட்டிக்கே திருமணமாம்
சந்தோஷ பூரிப்பில் குடும்பம்.

எவன் சொன்னான்..?
ஜாதகம் உண்மை என்று..?
தெரிந்து இருக்கும்
அப்போதே..!

சகுனம்ப்பார்க்கும் கிழவனும்
கிழவிக்கும் ஏன்..?
பூனைக்கும் தெரியவில்லையா..?

அழைப்பிதழ் அடித்து ஊரைக்கூடி
அழைத்த போது மரணவாசலின்
வழி என்று தெரியவில்லை …?

கடன்கள் வாங்கிய போதும்,
நகைகள் வாங்கிய போதும்,
எட்டிப்பார்க்க வில்லை அப்போது - வட்டியாக.

இன்னார் துணை என்று எழுதிய
கடவுளும் வரவில்லை உதவிக்கு..!

உன்னை வளர்த்து நாங்கள் வளர
யாகம் பற்ற வைத்தபோதும்
எமனாக வரவில்லை...?

வந்தாய் அப்போது..!
எப்போது..? கழுத்தில் தாலிகட்டி
முடிக்கும் முன்பு தீயாக
மின்சார கசிவாக,
வந்து அழித்தாய்
எல்லா கனவுகளையும்..!

எமனே ..?
இன்றும் கேட்கிறேன்
உனக்கு யாரு பத்திரிக்கை
வைத்தது…! வரச்சொல்லி…?
இதை எழுதிய சில மாதங்களில் நடந்த மற்றொரு தீ விபத்து கும்பகோணம் பள்ளியில் நடந்தேறியது. விபத்துகள் நடப்பது நமது கையில் இல்லை. இதை படிக்கும் போதும் தீ (வலி) மட்டும் இன்னும் நம்மை வெப்பமாக (கண்ணீராக ) சூழ்ந்து கொண்டுதான் இருக்கிறது...!

Thursday 25 September, 2008

தமிழன்






தமிழக விவசாயி வரலாற்றில் இனி மீண்டும் அந்த வறட்சி காலம் வர வேண்டாம். ஏர் உழுத கையால் கஞ்சி தொட்டிகள் முன்பு வரிசையாய் கையேந்தி நின்றது. உலகுக்கு அரிசி அறுவடை செய்து புகழ் பெற்ற தஞ்சை மண்ணுக்கு, ஏன் தமிழனுக்கும் அந்த நிலை மீண்டும் வர வேண்டாம். வரலாற்றில் கரும்புள்ளி ஆகிப்போன நாட்களில் வந்தது பொங்கல் பண்டிகை, இயற்கையிக்கும் இந்த மண்ணுக்கும் நன்றி சொல்லும் தமிழர் திருநாள், அன்றைய தினத்தில் வாடும் பயிர்களை கண்ட போது எல்லாம் கண்ணீர் வடித்த தமிழக விவசாயிகளின் கண்ணீரை நினைத்த போது என் தமிழால் நான் என் பேனாவால் கண்ணீர் வடித்த கவிதை இது.

வறண்டு கிடக்கும்
கிணறுகளில் நீருக்கு பதில்
வெடிப்புகள்.

ஆற்று மண்ணில் மட்டுமா
வீடு கட்டினர் ஏன்..?
வாய்க்கால் மணலிலும்
கூட.

பாயட்ச நீர் இல்லை..!
விளை நிலத்தில் நின்ற போது
சிந்திய வேர்வையே நீராய் ஆனது.

வீசும் காற்று மட்டும் அல்ல
விடும் மூச்சில் கூட
அனலின் தாக்கம்.

வெடித்துப்போன பலூன்களை
போல நிலமும்
பிளந்து கிடக்கிறது.

அணைகளில் இருந்து திறந்து
விட்ட நீரில் காற்று கூட
வந்து சேர்த்த பாடில்லை.

இதை பார்த்து பார்த்து
கண்ணீர் கூட வற்றி விட்டது.

உழுத ஏர்களும்
விற்று பேரிஞ்சம்பலம்
பார்த்தாயிற்று.
அடகு வைக்க எதுவும் இல்லை.

பொங்கல் வந்து விட்டது எதை
அறுவடை செய்ய..?
உயிரில்லா பயிர்களையா..?

தினமும்
உண்பதே கேள்விகுறி..??
கஞ்சி தொட்டிகளை
எதிர் பார்த்து நிற்கையில்..!

பொங்கல் அன்று,
சூரியனுக்கு படையலிட்டு
வைப்பவன் தமிழன்.

ஏன்..?
துரோகம் இயற்கையே செய்தாலும்
துரோகம் செயற்கையே செய்தாலும்
நன்றிகடனை முறையாக
செலுத்துவான் – தமிழன்.

ஹைக்கூ - கவிதை மூட்டை

பூவேலி
ஆநிரைக்கு போட வேண்டியதை
தவறாக பூக்களுக்கும்
போட்டுவிட்டார்கள்.

பறவை
பாஸ்போர்ட் –
இதற்க்கு மட்டும்
சிறகுகளாய்.
Unmai
பேச பலர் எதிர் பார்ப்பது
சொல்ல சிலர் நினைப்பது.

குருட்ச்சேத்திரம்

மனிதன் கற்ற இடத்திலேயே
வாழ போராடும் இடம் – சமுதாயம்.

கரைவேட்டி
இவர்கள் கையில் உஜாலா கொடுங்கள்
ஆடையோடு மனதும் மாறிட..!

லஞ்சம்
லஞ்சமே!
துட்டு எவ்வளவு வேண்டும்..?
நீ சாக..!

டைரி
தனியாக எழுத கிடைத்த தோழன்.
பல உண்மைகளை அடக்கி வைக்கும் தோழன்.
பேனா
உன்னால் வடிக்க முடியாத
எழுத்து சிற்பம் எது?

'திரு' டன்
'திரு' உன்னை யார் சேர்த்து எழுதியது..?
'டன்' உடன்.

போர்வை
வேலியை தாண்டியும் வருகிறது – கனவு.

இயற்’கை'
எந்த கை உன்னை செதுக்கியது..?


சிறைச்சாலை
உன்னில் போதிமரம் நட்டு இருந்தால்,
வந்து போனவர்களுக்கு
கிட்டி இருக்கும் மோட்சம்.

புத்தகம்
மனம் புத்துயிர் பெற நாம்
புதையிந்து கிடக்கும் கோட்டை.

புதையல்
தேடல் இருப்பதால் மட்டுமே...
கிட்டும்.

கல்லறை
கூண்டுக்குள் ஒதுங்கி கொண்ட
ஆன்மா..!

சிற்பம்
உளியை பதியவிட்டு
கல்லில் எழுதிய
கவிதை.


ஓவியம்
கனவுகளில் இருந்து
வெளிப்பட்ட நிஜம்.

வெற்றி - தோல்வி
வாழ்க்கையின் பயணத்தில் நமக்கு
முன்னாலோ பின்னாலோ
வருபவர்களால் கிடைப்பது.
ஆதலால் இது நிழற்குடையே..!
நாம் மட்டும் வாழ நம் வீடு அல்ல..!

Wednesday 24 September, 2008

காதல் அகராதி


ஆஹா..!
உன் அழகை
பார்த்து நான் சொன்னது.

தோழியே!
உன்னிடம் பழக
ஆரம்பித்தபோது சொன்னது.

அன்பே!
உன்னை காதலிக்க
ஆரம்பித்தபோது சொன்னது.

காதலியே!
உன்னை முழுதாய் காதலிக்க
ஆரம்பித்தபோது சொன்னது.
உயிரே..!
உன்னை உயிரின் பாதி என்று
ஏற்று கொண்ட போது சொன்னது.

தோழனே..!
நான் சொல்லவில்லை நீ தான்
சொன்னாய்..?
நான் காதல் சொன்னபோது.
கிறுக்கனே!
உன் காதல் நினைவில் அலைந்தபோது
என்னை பலரும் சொன்னது.

காதலனே..!
எதிர்பார்த்தேன் ..! நீ
சொல்லி விடுவாய் என்று..!

தேவதாஸ்...!
இதுவே பலர் சொன்னது
என் தாடியை பார்த்து.

வாழ்க..!
நான் சொன்னது உன் கல்யாண
அழைப்பிதழில் என் பெயர் இல்லாதபோது.

தனிமையை..!
நான் பல நாள்
உனக்கு பிறகு விரும்பியது.

அகராதி எங்கும் எழுத முடியவில்லை
காதல் – இதன் பொருளை,
ஏன்?
ஒரு தலை ராகம் – காதல் ஆகாது.

தெய்வமே! கடன் கொடு...

குயிலே!
உன் குரலை கடன்
தந்தாயோ?
சிலர் உன் குரலில் பாடுகின்றனர்.

குரங்கே!
நீ எல்லாவற்றையும் கடன்
கொடுத்தாயோ?
இங்கு பலர் உன்னைபோல...
பஞ்சோந்தியே...!
உன் குணத்தை கடன் தந்தாயோ?
சிலர் உன் குணத்தில்!
வானவில்லே!
உன்னை யார் நிறத்தை
கடன் தர சொன்னது?
நிறவெறி தீரவில்லை..!

வானமே!
உன்னை கடனாக பெற்று இருந்தால்
எல்லை கோடுகள்
வரைய பட்டு இருக்காது.

நிலமே!
நீ மட்டும் உன் வட்டியை
வசூல் செய்து கொள்கிறாய்,
அடிக்கடி நடுக்கம் தந்து..?

புத்தனே!
உன் பொறுமையை கடன்
கேட்டு பெறாமல்
பலர் தவிக்கிறார்கள்.

தெய்வமே!
கடன் கொடு,
இந்த துன்பங்களில் இருந்து
விடுதலை.

Tuesday 23 September, 2008

நட்புக்காக

என்றோ..!, சந்திப்போம் என்று
சொல்லி பிரிந்தாய் ஞாபகம்.

உன்னை பார்த்த கண்கள்
உன்னை மனதால் நினைக்கும்
போது எல்லாம் ஈரமகவே..!

இல்லை..., இல்லை...,
விழ விடவே இல்லை
உன் புகைப்படத்தின் மேல்
என் கண்ணீரை..!

உன்னை அடித்த அடிகள்
நினைவுகள் மூலம்
பாய்ந்து கொண்டு
இருக்கிறது என் மேல்..!

நீ சொல்லிய வார்த்தைகளை
பிறர் உட்சரிக்கும் போதும்
அவர்களுக்குள் உன்னை
பலமுறை தேடினேன்.

நீ என்னை பிரியவில்லை..
நிழல் மூலம் உணர்கிறேன்.

நீ எங்கே..? இருட்டில்
தேடி கொண்டு இருக்கிறேன்.

என்ன விலை கொடுத்து
உன்னை பெற்றேன் ?
மீண்டும் பெற வழி சொல்.

செய்த நன்றியை மறந்தாலும்
நண்பனை மறப்பது கடினம்.

'முற்றும்' எதற்கும் அழகு
இதற்கும்மா அழகு....?

வாழ்வியல்

நேற்று கதை,
இன்று செய்தி!
நாளை வரலாறு.


நேற்று யாரோ!
இன்று இவரா!
நாளை எவர் அது?

நேற்று பார்த்தோம்...!
இன்று பார்க்கின்றோம்...!
நாளை பார்ப்போம்...!

நேற்று தோழி,
இன்று காதலி,
நாளை மனைவி.

நேற்று தொலைத்தேன்,
இன்று வாழ்கிறேன்,
நாளை ??? (கேள்விக்குறி).

கேட்காத சத்தம்

கேட்காத சத்தம்
கையேந்தி கேட்டவுடன்
கிடைக்காத காசுக்காக
திட்டும் ஏழையின் சத்தம்.
அறிக்கை மட்டும் நம்பி
வாக்கு அளித்து விட்டு ஏமாந்துபோன
வாக்காளர்களின் சத்தம்.
மனுக்கள் போட்டுவிட்டு
மன்றங்கள் முன் தவம்
கிடப்பவரின் சத்தம்.

வான்மழை வராதோ என
தூறல்களை பார்த்து
வயல்களின் சத்தம்.
இன்றாவது சொல்லிவிட சென்று
என்னவள் முன்னால் காதலை
மனதில் கூறிய சத்தம்.

இவை, கேட்க மட்டும் வைத்து
எதிரொலிப்புகளை நோக்கி
தவம் கிடப்பவையே!