Saturday 15 November, 2008

அழகான அவஸ்தைகள்

பெண்ணே ஒரு கவிதை அதனால்தான் பெண்களில் கவிஞர்களும் குறைவோ..? தெரியவில்லை, ஒரு பெண்ணின் காதல் தவிப்பை பதிவு செய்யும் முயற்சியில் எழுதிய கவிதை. நிறைய தவிப்புகள் பெண்களுக்கே உரித்தானவை, அவற்றை ரத்தமும் சதையும் கொண்டு வாழும் பெண்ணாலே மட்டும் உணர முடியும், நான் என்னால் முடிந்தவற்றை என் பேனா வரிகளில் வரைந்த கற்பனை கவிதையே..!
என்ன செய்வது என் பேனாவிற்கு ரத்தம் விடவில்லை மை தானே இட்டு எழுதுகிறேன். எத்தனை உண்மை என்று பெண்மை தான் சொல்ல முடியும்.
கள்வனே..!
என்ன மாயம் செய்து
என்ன தந்திரம் செய்தாயோ..!
என்னை உன் வசப்படுத்த.

என் வருகை உனக்கு
உணர்த்த காலில்
கொழுசு மாட்டி நடந்தேன்...

உன் அருகில் அமர இடம்
இருந்தும் உன் பின்னால்
இருந்த இருக்கைகளிலே அமர்ந்தேன்
உன்னை ரசிக்க வேண்டாமா..?

இரவில் படுக்கும் போதும் கூட
அருகில் நீ கனவிலாவது
வந்து படுக்க இடம் வேண்டும்
என்று தங்கையிடம் கூட படுப்பது இல்லை.

மௌனமாய் ஒரு காதல்
பார்த்து இருக்கிறாயா..?
அது என்னுடையது தான்.

பெண்ணாக பிறந்ததால்
எனக்குள் மடிந்து போன
ஆசைகள் தான் எத்தனை..?

என் தோழியிடம் சொல்லி இருக்கிறாய்
என் மேல் இருந்த காதலை,
என்னிடம் சொல்ல தயக்கம் ஏன்..?

புரியாத ஜடம் என்று நினைத்தாயோ..!
தயங்கி தயங்கி வந்து
மெதுவாக “ நான்.... நான் .... உன் .. உன்னை…_____.”
என்று சொல்லி விட்டு ஒன்னும் இல்லை என்று
மௌனமாய் நிற்பாய்,
கேள்வித்தாளில் வந்த கோடிட்ட
இடங்களை நிரப்புக போல..?
காதலை மட்டும் நான் சொல்வேன் என்று
நினைத்தாயோ..?


எனக்கு தெரியும்,
நீயும் என்னை விரும்புகிறாய் என்று,
நானும், உன்னை விரும்புகிறேன்...
பிறகு ஏன்
மௌனமாய் இந்த காதல்..?

இது தான் அழகான அவஸ்தைகள்,
நீ சொல்வாய் என்று நானும்,
நான் சொல்வேன் என்று நீயும்
நகரும் இந்த தருணங்கள்.

ஒரு போதும்,
நிலா தந்தி அடித்தது இல்லை
அதன் வருகையும் மறைவையும்
உணர்த்த..!


ஒரு நாளும்,
பறவைகளுக்கு கூடுகள் கட்ட,
பழங்கள் தின்ன,
வரவேற்புரை வாசிப்பது இல்லை..

பெண், நான் அமைதியாக
உன் வரவுக்காக
காத்து இருக்கிறேன்… மரம் போல்…!

No comments: